பதவி, பணம், செல்வாக்கு போன்றவற்றிற்கு திராவிடர் கழகம் அடிமையான பிறகு, பெரியாரின் கருத்துகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்து செல்வதில் பெரியார் திராவிடர் கழகமே முன்னணியில் நிற்கிறது.
ஈழத் தமிழர் நலனுக்கு எதிராக மௌனியாக இருக்கும் தமிழக அரசுக்கு திராவிடர் கழகம் சாமரசம் வீசிக் கொண்டிருக்கையில் ஈழப் பிரச்சனையை உயிர் பிரச்சனையாக கையிலெடுத்து போராடி வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.
ஈழ நலனுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்களை திரட்டி உண்ணாவிரதம் இருந்த போது அதனை ஆதரித்த பெரியார் திராவிடர் கழகம், அதே விஜய்யை எதிர்த்து இன்று மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஏன் இந்த கண்டனம்?
ஈழத் தமிழர் நலனுக்காக உண்ணாவிரதம் இருந்த விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு காங்கிரஸின் உதவியை நாடியிருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் ராகுல் காந்தியை சந்தித்த விஜய் அவருடன் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். காங்கிரஸில் விஜய் சேர்வது குறித்தும் அப்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது.
ஈழம் எரிந்ததற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு என்பது சின்ன குழந்தைக்கே தெரியும். ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்னிட்டே லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன என விமர்சகர்கள் பகிரங்கமாக பேசியும், எழுதியும் வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு கொண்டாடுவதை அவரது ரசிகர்கள் பலரே விரும்பவில்லை. இதனை பகிரங்கப்படுத்தும் வகையில் பெரியார் திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு போராடிய இளையதளபதியே, தமிழின படுகொலைக்கு துணை போன காங்கிரஸுடன் நட்புக்கரமா, சிந்திப்பீர் என்ற வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டர்கள் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக