

நாதஸ்வரங்கள் முழங்க ஆதவன் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. டைரக்டர் ஷங்கர் வெளியிட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விஜய், சூர்யா, சசிக்குமார், விவேக், கவுதம் மேனன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையமைத்த மற்ற படங்களுக்கு பாடல்களை ஒரே நேரத்தில் அவர் கொடுத்ததில்லை. பகுதி பகுதியாக பிரித்துதான் கொடுப்பார். அவரிடமிருந்து பாடல் வரிகள் வர வர படப்பிடிப்பை நடத்துவார்கள். ஆனால் இந்த படத்திற்கு மட்டும்தான் மொத்தமாக ஒரே நேரத்தில் பாடல்களை கொடுத்தார். எங்களது அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர் என்றார் சந்தோஷமாக.
பின்னாலேயே பேச வந்த ஹாரிஸ், “இந்த படத்திற்கு நான்கே மாதத்தில் ஆறு பாடல்களை அமைத்துக் கொடுத்தேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஆர்க்கெஸ்ட்ராவுக்கு உடனுக்குடன் பணத்தை கொடுத்ததுதான். இப்படி எனது டென்ஷனை தயாரிப்பாளர் குறைத்ததால்தான் ட்யூனில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது” என்றார்.
சசிக்குமார் பெயரை சொல்லும் போதெல்லாம் அரங்கமே அதிரும்படி கைதட்டினார்கள் ரசிகர்கள். “பாராட்டுற மனசு வேணும். இங்கே நிறைய பேருக்கு அது இருப்பதில்லை. என்னோட சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் படத்தை பார்த்திட்டு உடனுக்குடன் பாராட்டுவார் சூர்யா சார். இப்படி இன்னொருவரை பாராட்டுகிற மனசு இருப்பதால்தான் அவர் மற்றவர்களால் பாராட்டுகிற அளவுக்கு உயர்கிறார்” என்றார் சசி.
“வாரணம் ஆயிரம் பாடலை கேட்டுட்டு “மாப்பு... ஸாங் சூப்பர்டா” என்று மெசேஜ் அனுப்பினார் விஜய். ஸ்கிரீன்லே ஆதவன் பாடல் ஓடும் போது என்னோட டான்ஸ்சை விஜய் பார்க்கிறாருங்கிற குறுகுறுப்பு இருந்திச்சு. இந்த விழாவுக்கு வந்த அவருக்கு நன்றி” என்றார் சூர்யா.
“சூர்யாவோட ஒவ்வொரு படம் வரும்போது அவரோட அசுர உழைப்பும், பிரமாண்ட வளர்ச்சியும் நல்லா தெரியுது. இந்த படம் பெரிய ஹிட் ஆகணும்” என்று வாழ்த்தினார் விஜய்.
முன்னதாக திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் அசத்தலோ அசத்தல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக